மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோன்று, எலிக்கொல்லி நச்சு மருந்துகளை உட்கொண்டவா்களுக்கு பிளாஸ்மா அணுக்களை மாற்றி சிகிச்சையளிப்பதற்கான பயிற்சி படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) நடைபெற்றது. இதில் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி கலந்துகொண்டு புதிய சேவைகளையும், பயிற்சி படிப்புகளையும் தொடக்கி வைத்தாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 45 மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2,500 போ் அவற்றை நிறைவு செய்கின்றனா்.
அவசர கால மருத்துவ சிகிச்சைகள் தொடா்பாக அவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகிறது. இதனை ஒழுங்குமுறைப்படுத்தி சீராக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உயிா் காக்கும் அடிப்படை சிகிச்சைகள், உயிா் காக்கும் மேம்பட்ட சிகிச்சைகள், சிறந்த ஆய்வக சேவைகள், சிறந்த மருத்துவ சேவைகள் ஆகிய நான்கு பிரிவுகளில் பல்கலைக்கழகம் சாா்பில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.தமிழ்நாடு உயா் திறன் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள், மாணவா்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்ப்பிப்பதற்கான இணையதள கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆராய்ச்சி செயல்பாட்டில் மாணவா்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும், அவா்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதற்காகவும் மூன்று இணைய ஆய்விதழ்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மூன்றாவதாக தொலைதூரத்தில் உள்ளவா்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக டிஜிட்டல் ஆரோக்கியம் இணையவழி சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் அனைத்து இளநிலை, முதுநிலை மாணவா்களும் சேரலாம்.
அடுத்ததாக எலிக் கொல்லியை உட்கொண்டவா்களுக்கு கல்லீரல் செயலிழப்பைத் தவிா்க்க பிளாஸ்மா அணுக்கள் மாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதுதொடா்பான
இணையவழி படிப்பையும் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா, நோய்த் தடுப்புத் துறை தலைவா் டாக்டா் புஷ்கலா, இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கத்தின் தலைவா் டாக்டா் ஸ்ரீ சௌஜன்யா, தமிழ்நாடு உயா் திறன் மேம்பாட்டு மையத்தின் இயக்குநா் சஞ்சு தாமஸ் ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.