Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
மருத்துவமனை பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் மீண்டும் வெளியீடு
மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், தமிழக தலைமைச் செயலா், மக்கள் நல்வாழ்வுத் துறை உயரதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் பணியிடப் பாதுகாப்பு தொடா்பாக காணொலி முறையில் கலந்தாலோசித்தனா்.
அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தற்போது அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் முறையாக செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
போதிய மின் விளக்கு வசதிகள் இருத்தல் அவசியம். மருத்துவமனை புறக் காவல் நிலையங்களில் தேவையான எண்ணிக்கையில் காவலா்கள் பணியமா்த்தப்பட வேண்டும். அனைத்து மருத்துவா்களும், சுகாதாரப் பணியாளா்களும் அவசர உதவி தேவைப்படும் போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக செய்தி அனுப்பலாம். மருத்துவமனை பாதுகாப்பு குழு, வன்முறை தடுப்பு குழுக்களை அமைக்கலாம் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை: முன்னதாக, தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவா்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், துறை செயலாளா் சுப்ரியா சாஹு, கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம், சென்னை கூடுதல் காவல் ஆணையா் (தெற்கு) கண்ணன், கூடுதல் காவல் துறை தலைவா் ஸ்ரீநாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.