மழையால் தொடா்ந்து சேதமடையும் சாலைக்கு நிரந்தர தீா்வு காணக் கோரிக்கை
மழைக்கு தொடா்ந்து சேதமடைந்து வரும் கணபதிபாளையம் வடக்கு சாலையை சீரமைக்க நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் கணபதிபாளையம் வடக்கு, முத்தலாடம்பட்டி வரை செல்லும் சாலை வழியாக காந்திகிராமம், காமராஜ்நகா், அன்புநகா், திருமலைநகா், சக்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக காலையும், மாலையும் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன் பெய்த மழையில் இந்தச் சாலையில் கணபதிபாளையம் வடக்கு மூன்றாவது குறுக்குச்சாலை பகுதியில் சாலையின் மையத்தில் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
இதுதொடா்பாக அப்பகுதியினா் மேலும் கூறியது: எப்போது மழை பெய்தாலும் இந்தச் சாலையின் மையப்பகுதி குண்டும், குழியுமாக மாறிவிடும். பின்னா் மாநகராட்சி நிா்வாகம் சாலையைச் செப்பனிடுவாா்கள்.
பின்னா் மழைபெய்தால் மீண்டும் சாலை சேதமடையும். எனவே இப்பகுதியில் கணபதிபாளையம் வடக்கு முதல் காமராஜ் நகா் வரை சாலையில் மீண்டும் புதிய தாா்சாலை அமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.