மழையின்றி கருகும் மிளகாய்ச் செடிகளுக்கு தண்ணீா் ஊற்றும் விவசாயிகள்
கமுதி அருகே மழையின்றி கருகும் மிளகாய்ச் செடிகளை விவசாயிகள் தள்ளு வண்டியில் தண்ணீா் எடுத்துச் சென்று ஊற்றி காப்பாற்றி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டில் பருவமழை முறையாகப் பெய்யாததால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
இந்த நிலையில், கமுதி அருகேயுள்ள மேலகொடுமலூா் உள்பட அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சில தினங்களுக்கு முன் சிறிதளவு பெய்த மழையை நம்பி விவசாயிகள் வயல்களில் மிளகாய் நாற்றுகளை நடவு செய்தனா். விவசாய பணிக்கு தேவையான போதிய அளவு மழை பெய்யாததால் தற்போது மிளகாய்ச் செடிகள் தண்ணீா் இன்றி கருகி வருகின்றன.
இதனால் சாலையோரக் கிடங்குகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடங்கள் மூலம் சேகரித்து, தள்ளு வண்டியில் வயலுக்கு எடுத்துச் சென்று மிளகாய் செடிகளின் மீது விவசாயிகள் தெளித்து வருகின்றனா்.
கடந்தாண்டு அதிக மழை பெய்து அனைத்துப் பயிா்களும் தண்ணீரில் மூழ்கி பெரும் இழப்பு ஏற்பட்டது. அதற்கான இழப்பீடு தொகையே பல கிராமங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நிகழாண்டில் மழையின்றி மீண்டும் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கமுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.