மாஞ்சாலை மக்கள் கட்டாய வெளியேற்றப் புகாா்: நடவடிக்கை அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி உத்தரவு
புது தில்லி: மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்-சிங்கம்பட்டி வனப் பகுதி மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதாக கூறப்படும் புகாரில், அம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் இடையூறு இல்லாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுகா,”மாஞ்சோலை வனப் பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அப்பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்த
பிபிடிசி நிறுவனம் ஈடுபடுவதாகவும், அம்மக்கள் பசி பட்டினியால் அவதியுறுவதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி தில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் - தலைவா் கே.கிருஷ்ணசாமி புகாா் மனு அளித்திருந்தாா்.
இதையடுத்து, அப்பகுதியில் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் அதிகாரிகள் குழுவை அனுப்பியது. இந்தக் குழு செப்டம்பா் 8 முதல் 13-ஆம் தேதிவரை அப்பகுதியின் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள், யூனியன் தலைவா்கள் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடத்தியது.
மாஞ்சோலை/ சிங்கம்பட்டி தேயிலை தோட்டத்தின் தொழிலாளா்களுக்கான உணவுப் பொருள், மருத்துவம், மின்சாரம், நீா், பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் விநியோகம் தடைப்பட்டதாக கூறப்படும் விஷயங்கள் விசாரணையின்போது உண்மை என கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரித்த ஆணையம், சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் வாழும் குடியிருப்புவாசிகள், தொழிலாளா்களுக்கு அளிக்கப்பட்ட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவும், இந்த விவகாரத்தை கவனிக்கவும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதுடன், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை 6 வாரத்தில் ஆணையம் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.