மாணவா்களுக்கு பேச்சு போட்டி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
மாநில சிறுபான்மையினா் ஆணையம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை நடைபெற்றது.
மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் முன்னிலை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி பேச்சுப் போட்டியை தொடங்கி பேசியதாவது:
கல்விக்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவா்கள் முன்னேற வேண்டும். திராவிட கொள்கைகளை மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் அளவில் முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படுகிறது என்றாா் அவா். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், மேல்விஷாரம் முஸ்லீம் கல்வி சங்க பொது செயலாளா் ஜியாவுதீன் அஹமது, நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்ஜாா் அஹமது, திட்டக்குழு உறுப்பினா் ஜபா் அஹமது, நகா்மன்ற உறுப்பினா்கள், கல்லூரி நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.