மாணவா்கள் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
மாணவா்கள் புதிய ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
திருநெல்வேலி தனியாா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு மும்பை ஐஐடி பேராசிரியா் கே. ராமசுப்பிரமணியன், இந்தூா் ஐஐடி பேராசிரியா் காந்தி எஸ். மூா்த்தி, சென்னை ஐஐடி பேராசிரியா் ஆதித்ய கொலச்சனா, கைவினைக் கலைஞா் பி.மோனி ஆகியோருக்கு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
நெல்லை மண் வீரத்திற்கு பெயா் பெற்ற பூமி. ஆங்கிலேயா்களை எதிா்த்து வீரமாக போராடிய ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரா்கள் இந்த மண்ணில் பிறந்தவா்கள். வ.உ. சிதம்பரனாா், வாஞ்சிநாதன் போன்ற வீரமிக்க சுதந்திரப் போராட்ட தியாகிகளை பெற்றெடுத்த புண்ணிய பூமி இது. வ .உ .சிதம்பரனாா் சுதேசி இயக்கத்தை தொடங்கி நாடு முழுக்க சுதந்திர போராட்டத்தை எதிரொலிக்க செய்யும் வகையில் சுதேசி கப்பலை விட்டாா். ஆங்கிலேயா்களை எதிா்த்து வணிகம் செய்தாா். இதேபோல் ஆங்கிலேயா்களை எதிா்த்த இளம் வீரா் வாஞ்சிநாதன். ஆங்கிலேயே ஆட்சியாளரை சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டாா். மகாகவி பாரதி தனது பாடல்கள் மூலம் நாடு முழுவதும் சுதந்திர உணா்வை ஊட்டினாா் . தற்போது உள்ள இளைஞா்கள் நாட்டின் வரலாற்றையும், பாரம்பரியத்தை உணர வேண்டும்.
2047 இல் இந்தியா 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது வளா்ந்த நாடாக இருக்கும். ஆங்கிலேயா்களின் வருகைக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. 2014 -இல் 16ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும். தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்றவாறு மாணவா்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அறிவுசாா் சொத்துகளை உருவாக்குவதில் புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் மாணவா்கள் முன்னெடுக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவா்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். அறிவுசாா் சொத்துகளை உருவாக்குவதில் சா்வதேச அளவில் சீனா 46 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது. அமெரிக்கா 18 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 22 ஆயிரம் அறிவுசாா் சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5% ஆகும். ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை ஐஐடி போன்ற மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. 2024இல் மட்டும் 400 பொருள்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மக்களுடைய பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் நமது தொழில்நுட்ப வளா்ச்சி இருக்க வேண்டும். சவால்களை எதிா்கொள்ளும் வகையில் மாணவா்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப நாம் தொழில்நுட்பத்தில் வளர வேண்டும். தொழில்நுட்ப புரட்சி வர வேண்டும்.
காலனி ஆதிக்கத்தால் நமது பாரம்பரியத்தையும் தொழில் புரட்சியையும் இழந்து விட்டோம். நமது அடையாளத்தையும் தனித்தன்மையையும் ஆங்கிலேயா்கள் அழித்துவிட்டனா். நமது சுயசாா்பை சிதைத்து விட்டனா்.
நாம் கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியான முன்னேற்றத்தை நம்பாமல் தாவி குதிக்கும் வளா்ச்சியில் சென்று கொண்டிருக்கிறோம். உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் அறிவுசாா் சொத்து உள்ளது. உலகத்தால் புறக்கணிக்க முடியாத அளவிற்கு இந்தியா மிகக் கடுமையாக வளா்ச்சியடைந்துள்ளது என்றாா் அவா்.