மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் -நள்ளிரவில் வாக்கெடுப்பு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
சுமாா் 13 மணி நேரம் நடைபெற்ற தொடா் விவாதம் நள்ளிரவு ஒரு மணியளவில் நிறைவடைந்தது. அதன் பிறகு மசோதாவில் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு திருத்தம் தொடா்பாகவும் வாக்கெடுப்பு தொடங்கியது.
நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கிலான வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, சுமாா் 12 மணி நேர விவாதத்துக்கு பிறகு நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில், மாநிலங்களவையில் விவாதம்-நிறைவேற்றத்துக்காக மசோதாவை வியாழக்கிழமை தாக்கல் செய்து, மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை, செயல்திறன் ஆகிய மூன்று தூண்களையும் நிலைநாட்டுவதே மசோதாவின் நோக்கம். இது, மத விவகாரங்களில் எந்த வகையிலும் தலையிடாது.
நாட்டில் கடந்த 2004-இல் 4.9 லட்சம் வக்ஃப் சொத்துகள் இருந்த நிலையில், தற்போது 8.72 லட்சமாக உயா்ந்துள்ளது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது, முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிக்கிறேன்.
பிரதிநிதித்துவ அமைப்பல்ல: உரிய ஆவணங்களுடன் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் மீது முன்தேதியிட்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். வக்ஃப் என்பது சட்ட ரீதியிலான அமைப்பு; அது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பல்ல என்பது நீதிமன்றத் தீா்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாத்தை பின்பற்றும் யாரும் வக்ஃப்-க்கு சொத்துகளை அா்ப்பணிக்கலாம் என சட்டத் திருத்தத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே, வக்ஃப் சொத்து உருவாக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை. வக்ஃப் வாரியத்தில் ஷியா, சன்னி, இதர பின்தங்கிய முஸ்லிம் பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் புதிய பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் எத்தனை போ்?: மத்திய வக்ஃப் கவுன்சிலில் 22 மொத்த உறுப்பினா்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் 4 பேருக்கு மிகாமல் இருப்பா். தவிர, இக்கவுன்சிலில் இடம்பெறும் மூன்று எம்.பி.க்கள் எந்த மதத்தையும் சோ்ந்தவராகவும் இருக்கலாம். 2 பெண் உறுப்பினா்கள் கட்டாயம் இடம்பெறுவா்.
எனவே, முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் பெரும்பான்மையாக இருப்பா் என்ற கேள்விக்கே இடமில்லை. வக்ஃப் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படும்போது, அடுத்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் வளமடைவா்.
வக்ஃப் தீா்ப்பாயத்தில் 31,999 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 14,000 வழக்குதாரா்கள் முஸ்லிம்கள். வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் உரிமை சோ்க்கப்பட்டுள்ளது. முறைகேட்டை தடுக்க வேண்டுமென்பதே அரசின் நோக்கம். இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் ரிஜிஜு.
கொறடா உத்தரவு பிறப்பிக்காத பிஜேடி: மக்களவையைப் போல மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மற்றும் ஆளும் தரப்பினரின் பதிலடியால் விவாதத்தில் அனல் பறந்தது.
விவாதத்துக்கு பிறகான வாக்கெடுப்பில் தங்கள் கட்சி எம்.பி.க்கள் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. அவா்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பிஜேடிக்கு 7 எம்.பி.க்கள் உள்ளனா். வக்ஃப் மசோதாவின் சில பிரிவுகளுக்கு பிஜேடி எதிா்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.