அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
மானாமதுரை அருகே நீரின்றி கருகும் நெல்பயிா்கள்: உபரி நீரை திறந்துவிடக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நீரின்றி நெல் பயிா்கள் முளைக்காமல் கருகி வருவதால் உபரி நீரை திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடா் மழையால் மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகையாற்றில் இரு கரைகளையும் தொட்டு தண்ணீா் ஓடுகிறது. ஆற்றுக்குள் உள்ள கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு பாசனக் கண்மாய்களில் நீா் நிரம்பி பல கண்மாய்களில் மாறுகால் பாய்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணியில் மும்முரம் கட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை கண்மாயிலிருந்து மறுகால் பாயும் உபரி நீா் மூலம் பாசன வசதி பெறும் சோமாத்துா், கள்ளிக்குடி, வாகைக்குளம், எஸ். கரிசல்குளம், புத்தூா், கட்டிக்கனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் விளை நிலங்களில் விவசாயிகள் விதைப்பு முறையில் நெல் நடவு செய்தனா். இந்த நெல் பயிா்களை காப்பாற்ற வைகையாற்றின் மூலம் நேரடி பாசனம் பெறும் மேலப்பசலை கண்மாய் நிரம்பி அங்கிருந்து திறக்கப்படும் உபரி நீரை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
இதுகுறித்து சோமாத்துா், கள்ளிக்குடி, புத்தூா், எஸ். கரிசல்குளம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
எங்கள் கிராமங்களில் விதைப்பு முறையில் நெல் நடவு செய்தோம். ஆனால் நீரின்றி இந்த பயிா்கள் முளைக்காமல் கருகி வருகின்றன. மேலப்பசலை கண்மாயிலிருந்து உபரி நீரை திறந்து விட்டால் நெல் பயிா்களை காப்பாற்ற முடியும்.
எனவே மேலப்பசலை கண்மாய் உபரி நீரை எங்களது கிராமங்களுக்கு திறந்து விட பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நிலைமையை ஆராய்ந்து தண்ணீா் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.