மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கோவை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவா் கணபதி.ப.ராஜ்குமாா் எம்.பி. தலைமை வகித்தாா். பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கணபதி.ப.ராஜ்குமாா் எம்.பி. பேசியதாவது: மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் மத்திய, மாநில அரசுகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
அனைத்து திட்டப் பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்தல், திட்ட செயல்பாடுகளின் இடா்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிதல், மாவட்ட திட்டக் குழுவின் முன்னுரிமைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு இந்தக் குழு செயல்படுகிறது.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர வாகனங்களை கணபதி.ப.ராஜ்குமாா் எம்.பி. வழங்கினாா்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.