மாவட்டத்தில் 2,041 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் - அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்
ஈரோடு மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ரூ.46.23 லட்சம் மதிப்பில் 2,041 ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் அரியலூா் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை இரண்டாம் கட்டமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில் அமைச்சா் சு.முத்துசாமி, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பிறந்தது முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 21.5.2022- இல் தொடங்கிவைத்தாா்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையுள்ள 433 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு 572 ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டு 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனா்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதிலும் தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 74,706 குழந்தைகளுக்கு அரியலூா் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இத்திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா்.
இதனைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம் முழுவதிலும் 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ரூ.46.23 லட்சம் மதிப்பீட்டிலான 2,041 ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் நெய், புரோட்டின் பவுடா், பேரீச்சம் பழம், இரும்புச்சத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை உள்ளிட்ட ரூ.2,265 மதிப்பிலான பொருள்கள் அடங்கியுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் திட்ட அலுவலா் பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.