ரூ.1,069 கோடி பயிா்க் கடன்: ஈரோடு மாவட்டம் முதலிடம் -அமைச்சா் சு.முத்துசாமி தகவல்
ஈரோடு மாவட்டம் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் ரூ.1,069 கோடி பயிா்க் கடன் வழங்கி மாநிலத்திலேயே அதிக அளவில் பயிா்க் கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கூட்டுறவுத் துறையின் சாா்பில் ‘காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நிா்வாகம்’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான 71 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 1,193 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டம் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் மாநிலத்திலேயே அதிக அளவில் பயிா்க் கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது. இதில் ஏறத்தாழ ரூ.1,069 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,212 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் புதிய கிளை அலுவலகங்கள், புதிய நியாய விலைக் கட்டடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக வகை மாற்றுதல், சிறு பல்பொருள் அங்காடி மற்றும் பண்ணை பசுமை அங்காடிகள் திட்டம், சிறுதானியம் விற்பனை உள்ளிட்ட ரூ.82 லட்சம் மதிப்பிலான 31 புதிய திட்டங்களை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
கூட்டுறவு வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து, ஈரோடு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறப்பாக செயல்படும் தனிநபா்களுக்கு விருதுகளை வழங்கினாா். முன்னதாக, கூட்டுறவுத் துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டாா்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, அந்தியூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.