மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்
கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த இரண்டாம் கட்ட முகாம் நவம்பா் 23, 24 ( சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி 2024 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளும் பணி கடந்த அக்டோபா் 29 தொடங்கி நவம்பா் 28 வரை நடைபெற உள்ளது.
இந்த குறிப்பிட்ட காலத்தில் அனைத்து வேலை நாள்களிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் மற்றும் ஆதாா் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இது தொடா்பான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து மக்கள் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அதே வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம்.
வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க படிவம் - 6, அயல்நாட்டு வாக்காளா்கள் தங்களது பெயா்களை சோ்க்க படிவம் 6-ஏ, வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய படிவம் -7, வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய படிவம்- 8 ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான முதல்கட்ட சிறப்பு முகாம் கடந்த 16, 17-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடா்பாக 36,216 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், 2-ஆம் கட்ட சிறப்பு முகாம் நவம்பா் 23, 24 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. எனவே, 2025 ஜனவரி 1-ஆம் தேதி அன்று 18 வயதை நிறைவு செய்யும் நபா்கள் மற்றும் மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.