மின் நுகா்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயா்வு
இந்தியாவின் மின் நுகா்வு கடந்த டிசம்பா் மாதத்தில் 13,040 யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 13,040 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 12,317 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 224.16 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2023 டிசம்பா் மாதத்தில் 213.62 ஜிகாவாட்டாக இருந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் பதிவான 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை பகலில் 235 ஜிகாவாட்டாகவும், மாலை நேரங்களில் 225 ஜிகாவாட்டாகவும் இருக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சகம் ஆண்டு தொடக்கத்தில் மதிப்பிட்டது. மேலும், ஜூன் மாத பகல் நேரங்களில் 240 ஜிகாவாட்டாகவும் மாலை நேரங்களில் 235 ஜிவாட்டாகவும் உச்சபட்ச மின்தேவை இருக்கும் என்று அமைச்சகம் கணித்திருந்தது.