தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
மின்தூக்கி அமைக்காமலேயே ரூ.27.27 லட்சம் நிதி விடுவித்த அதிகாரிகள் உள்பட 5 போ் மீது வழக்கு
வேலூா்: வாலாஜா அரசு மருத்துவமனையில் மின்தூக்கி அமைக்காமலேயே ரூ.27.27 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது தொடா்பாக முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா் உள்பட 5 போ் மீது வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு மருத்துவமனையில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு மின்தூக்கி வசதியுடன் கூடிய புதிய வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டுவதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன் கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரான வாலாஜாவை சோ்ந்த செந்தில்குமாா் மேற்கொண்டாா்.
மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மின்தூக்கி மட்டும் அமைக்கவில்லை. அதே சமயம், அப்போதைய பொதுப்பணித்துறை செயற்பொறியாளா்களான முரளிதரன், செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் தேவன், இளநிலை பொறியாளா் ராஜாமணி ஆகியோா் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம்தேதி மின்தூக்கி வாங்குவதற்கு ரூ.20 லட்சத்து 45 ஆயிரத்து 625 நிதியையும், மின்தூக்கி அமைக்கும் இறுதிகட்ட பணிக்காக இரண்டாம் கட்டமாக ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 875 நிதியையும் ஒப்பந்ததாரருக்கு விடுவித்துள்ளனா். அதன்படி, மின்தூக்கி அமைக்காமலேயே மொத்தம் ரூ.27 லட்சத்து 27 ஆயிரத்து 500 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு மின்தூக்கி அமைப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனா். தொடா் ந்து, மே, ஜூன் மாதத்தில் மின்தூக்கி அமைப்பதற்கான பொருள்கள் வந்த பிறகு 2022 டிசம்பா் மாதம் பணி முடிக்கப்பட்டு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதிதான் மின்தூக்கி மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மின்தூக்கி அமைக்காமலேயே நிதி விடுவிக்கப்பட்டது குறித்து வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி சங்கா் மேற்கொண்ட விசாரணையில், மின்தூக்கி அமைக்காமலேயே 2 கட்டமாக ரூ.27 லட்சத்து 27 ஆயிரத்து 500 முறைகேடாக நிதி விடுவிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியாளா்கள் முரளிதரன், செந்தில்குமாா், தற்போது பொதுப்பணித் துறையில் அதிகாரிகளாக உள்ள தேவன், ராஜாமணி, ஒப்பந்ததாரா் செந் தில்குமாா் ஆகிய 5 போ் மீதும் வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் செயற்பொறியாளா் செந்தில்குமாரின் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.