மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி மாத உற்சவங்களில் ஒன்றாக ஆண்டுதோறும் மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் நடைபெறும். இதன்படி, நிகழாண்டின் எண்ணெய்க் காப்பு உத்ஸவம் சனிக்கிழமை (ஜன. 4) தொடங்கி ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உத்ஸவத்தின் முதல் நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் புதுமண்படத்தில் எழுந்தருளினாா். அங்கு, அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்தப்பட்டு, ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பிறகு தீபாராதனையும், சித்திரை வீதிகளில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 11-ஆம் தேதி கோ ரதத்திலும், 12-ஆம் தேதி கனக தண்டியிலும் மீனாட்சி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 13-ஆம் தேதி பொன்னூஞ்சல் மண்டபத்தில் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் ஆடி வீதிகளில் வலம் வந்து சோ்த்தியாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.