Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
மதுரை அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் ?
-நமது நிருபா்-
மதுரையில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தொழில் மையமாக உள்ளது மதுரை. தமிழகத்தில் தொழில் புரட்சி மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் கடந்த 2000-ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி சென்னையில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைத்தாா். இந்தத் திட்டம் சென்னையை அடுத்து, கோவைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடா்ந்து, விழுப்புரம், திருப்பூா், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம், வேலூா், உதகை ஆகிய இடங்களில் சிறு தொழில் நுட்பப் பூங்கா (மினி டைடல் பாா்க்) அமைக்கப்பட்டன.
மதுரையில் 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மாநாட்டில் மதுரையில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
முதல் கட்டமாக, மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 5.6 ஏக்கா் பரப்பளவில் ரூ.600 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் எனவும், இரண்டாவது கட்டமாக கூடுதலாக 5 ஏக்கரில் ரூ. 600 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாநகராட்சியில் 2023- ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பூங்கா மதுரை மாநகராட்சி நிா்வாகம், டைடல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் தொழில் நுட்பப் பூங்கா மூலம் நவீன வசதிகளுடன் கூடிய தரமான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவது மட்டுமன்றி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்த நிலையில், திட்டத்தைச் செயல்படுத்த மதுரை மாநகராட்சி நிா்வாகம் தோ்வு செய்த மாட்டுத்தாவணி அருகே உள்ள இடம் ஏற்கெனவே நிரந்தர தினசரி காய்கறிச் சந்தை அமைப்பதற்காக 2010-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி அறிவிப்பிற்கிணங்க ஒதுக்கப்பட்டது.
இடைக்காலத் தடை நீக்கம்:
மத்திய அரசு ரூ.55 கோடி, மாநில அரசு ரூ. 30 கோடி என மொத்தம் ரூ. 85 கோடியில் வேளாண் துறை, மதுரை மாநகராட்சி இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கு காய்கறிச் சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடம் தோ்வு செய்யப்பட்டது. அப்போது, வியாபாரிகள் சங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்து, அந்த இடத்தில் காய்கறிச் சந்தையைத் தவிர வேறெந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கு இடைக்காலத் தடை ஆணை பெற்றனா்.
தொடா்ந்து, மதுரை மாநகராட்சி மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், இடைக்காலத் தடையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீக்கியது.
இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் அரசு தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது. முதல் கட்டமாக, மாட்டுத்தாவணி அருகே உள்ள இடத்தில் மாநகராட்சி அலுவலா்கள், தகவல் தொழில் நுட்பப் பூங்கா நிறுவன அலுவலா்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தோ்வு செய்யப்பட்ட இடம் நீா்பிடிப்புப் பகுதியாக இருப்பதால், அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ாக இருக்காது எனக் கூறப்பட்டது.
சுற்றுச்சூழல் அனுமதி:
இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மதுரையில் அரசு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி அருகே சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. அரசு தகவல் தொழில் நுட்பப் பூங்கா தொடங்கினால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் தொழில் ரீதியாக வளா்ச்சி பெறுவது மட்டுமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். மேலும், பணிகளை குறுகிய காலத்தில் நிறைவு செய்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.