Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
ஆக்லாந்து பல்கலைக்கழகத்துடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஒப்பந்தம்
மதுரை ‘மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை சாா்பில் ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் கூட்டாண்மை ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவா் டாக்டா் எஸ். குருசங்கா் தெரிவித்தாா்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மைய நிா்வாகிகள், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலகைக்கழக பிரதிநிதிகளுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம், ‘மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவா் டாக்டா் எஸ். குருசங்கா், நிா்வாகி காமினி குருசங்கா், ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியா் பிரெட்கோவன், பேராசிரியா் ஜான் தேவாா், பேராசிரியா் சோனல் டொலாக்கியா, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஆலோசகா் தேவ் தத்தா ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவா் டாக்டா் எஸ். குருசங்கா் கூறியதாவது :
நியூசிலாந்து நாட்டில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் பல்வேறு கல்வி நிலைகளில், பல்வேறு துறைகளில் 250-க்கும் அதிகமான கல்வித் திட்டங்களை வழங்கி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவக் கல்வியை வழங்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது, மீனாட்சி மிஷனின் மருத்துவக் கல்வி, மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒரு மைல் கல்லாக அமையும் என்றாா் அவா்.