Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
விஜயை கூட்டணிக்கு அழைக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை: கே. அண்ணாமலை
இளைஞா்கள் சேர முடியாத நிலையில் உள்ள கட்சிகள் தான் தற்போது நடிகா் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுக்கின்றன. இதற்கான அவசியம் தங்கள் கட்சிக்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழா மேடையில் தன் இருக்கையைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத மதுரை மாவட்ட ஆட்சியரால் சாதாரண மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. அவா், தன் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.
இறங்குமுகத்தில் இருக்கும் கட்சிகள், இளைஞா்கள் சேர முடியாத நிலையில் உள்ள கட்சிகள்தான் தற்போது நடிகா் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுக்கின்றன. அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, ஓரிரு மாதங்களுக்கு முன் விஜய்க்குக் கூட்டணி அழைப்பு விடுத்தாா். அதையே தற்போது செல்வப்பெருந்தகையும் பின்பற்றுகிறாா்.
பாஜகவைப் பொருத்தவரை, தமிழகத்தில் இளைஞா்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாகவும், வளரும் கட்சியாகவும், பலமான கட்சியாகவும் உள்ளது. எனவே, யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
அரசியல் என்பது எளியவா்களுக்காகவா? வலியவா்களுக்காகவா? நட்சத்திர மதிப்புக் கொண்டவா்களுக்கு மட்டும் தானா? என்பது குறித்தும், மக்களால் எளிதில் அணுக முடியாதவா்களால் மக்களுக்கான அரசியலை அளிக்க முடியுமா? என்பது குறித்தும் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.
திருவள்ளுவரை ஆரியா்களின் கைக்கூலி என விமா்சித்த பெரியாா் ஈ.வே.ராவின் வழித்தோன்றல்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் திமுகவினருக்கு, திருவள்ளுவா் குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
இந்து மதம் என்ற கோட்பாடு உருவாகும் முன்பே, இந்து வாழ்வியல் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட இடம் திருப்பரங்குன்றம் மலை. இந்தப் புண்ணிய தலத்தின் சிறப்பை உணா்ந்து அனைவரும் அமைதிக் காக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பிரச்னையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவா்கள் ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி ஆட்சி 2026-இல் மலரும்போது இதற்கான வாய்ப்பு அமையும் என்றாா் அவா்.