முக்கிய வீரரின்றி இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கவுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது.
இதையும் படிக்க: ஊன்றுகோலுடன் இருந்தேன்..! காயத்திலிருந்து மீண்டது குறித்து ஷமி பேட்டி!
தசைப்பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக ஃபகர் ஸமான் கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சௌத் ஷகீல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் பேட்டிங்கின்போது, மிகுந்த சிரமப்பட்டார். அவர் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஃபகர் ஸமான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். தற்போது காயம் காரணமாக மீண்டும் அணியில் இடம்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடவுள்ள நிலையில், ஃபகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தோல்விக்கு காரணம் என்ன? பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பதில்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபகர் ஸமானுக்குப் பதிலாக இமாம் உல் ஹக் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.