இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வை...
முதுகு தண்டுவட தசைநாா் சிதைவுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்குமா?: உச்சநீதிமன்றம் கேள்வி
இந்தியாவில் முதுகு தண்டுவட தசைநாா் சிதைவுக்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளத்தைச் சோ்ந்த சீபா (24) என்ற பெண் முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். இது அரிய வகை மரபணு நோயாகும். இதுபோன்ற அரிய வகை நோய் பாதிப்புக்கான சிகிச்சைக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை நோயாளிகள் நிதியுதவி பெறமுடியும்.
இந்த நிதியுதவியுடன் கூடுதலாக ரூ.18 லட்சம் மதிப்பிலான மருந்துகளை சீபாவுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த பிப்.24-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சீபா தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆனந்த் குரோவா் ஆஜராகி, ‘முதுகு தண்டுவட தசைநாா் சிதைவுக்கு வழங்கப்படும் ரிஸ்டிபிலாம் மருந்தின் விலை பாகிஸ்தான் மற்றும் சீனாவில் குறைவாக உள்ளன. இதில் அந்நாடுகளின் அரசுகள் தலையிட்டதால், அங்கு அந்த மருந்தின் விலை குறைவாக உள்ளது’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘பாகிஸ்தானிலும், சீனாவிலும் ரிஸ்டிபிலாம் மருந்தின் விலை இந்தியாவில் உள்ளதைவிட குறைவாக இருக்குமானால், அதே குறைந்த விலையில் அந்த மருந்தை இந்தியாவிலும் கிடைக்கச் செய்ய முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு, அந்த மருந்தை உற்பத்தி செய்யும் ஹாஃப்மென் லா ரோஷ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை கேரள உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.