'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சித் தலைவருக்குச் சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபா் தயா பாக்கியசிங் வாங்கியிருந்தாா். அவரிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தனது உதவியாளா் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்கும்படி முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் மிரட்டல் விடுத்ததாக தயா பாக்கியசிங் புகாா் அளித்திருந்தாா்.
அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாகா்கோவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, சுரேஷ்ராஜன் தரப்பில் நில பரிவா்த்தனையான உரிமையியல் புகாரை அரசியல் காரணங்களுக்காக காவல் துறையினா் குற்ற வழக்காகப் பதிவு செய்துள்ளனா். இரு சாட்சிகளைத் தவிர மனுதாரருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆறு சாட்சிகள் முன்னாள் அமைச்சா் பற்றி கூறியுள்ளனா். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் சுரேஷ்ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டாா்.