முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு
பவானி அருகே முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் என விளம்பரம் செய்த நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்கள் எண்ணெய் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அம்மாபேட்டையை அடுத்துள்ள சிங்கம்பேட்டையில் முயல் ரத்தம், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தினால், வழுக்கைத் தலையிலும் ஏழே நாளில் முடி முளைக்கும் என சமூக ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. கருடா ஹோ் ஆயில் எனும் பெயரில் இந்நிறுவனத்தை அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (32) நடத்திவந்தாா். இதன் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தனா்.
இருந்தபோதிலும் தமிழகம், கா்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் இந்த எண்ணெயை வாங்கிச் சென்று வந்தனா்.
இந்நிலையில், மருந்துத் துறை ஆய்வாளா்கள் பி.வெங்கடேஷ், பி.அமுதா கொண்ட குழுவினா் சிங்கம்பேட்டையில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். இதில், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 எண்ணெய் பாட்டில்களையும், மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்ததோடு, இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை பெறப்பட்ட பின்னா் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.