முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்
இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
அமெரிக்காவை மையமாகக் கொண்டுள்ள தற்சார்பு நிறுவனமான இந்தியா ஹேட் லேப்(ஐஎச்எல்) ‘இந்திய வெறுப்பு ஆய்வகம்’ மேற்கொண்ட ஆய்வில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இந்தியாவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இத்தகைய வெறுப்புப் பேச்சானது, ஆளும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஹிந்து தேசியவாத இயக்கங்களின் கொள்கை, சித்தாந்தங்களுடன் பிண்ணிப் பிணைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் பரப்புரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக்கொள்ளத்தகாத அளவுக்கு அதிகம் வெளிப்படுத்தியதாக விமர்சகர்களும் செயல்பாட்டாளர்களும் பிரதமர் நரேந்திர மோடி, அவர் சார்ந்துள்ள பாஜகவ மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹிந்து பெரும்பான்மையின மக்களை பிரித்து வாக்கு சேகரிக்க இந்த யுக்தியை அவர்கள் கையாண்டிருப்பதாக விமர்சன்ம் முன்வைக்கப்படுகிறது.
பொதுத்தேர்தல் பரப்புரையின்போது மோடி முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் தேசத்தின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பாஜகவின் ஹிந்து தேசியவாத பரப்புரையால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து 220 மில்லியன் மடங்குக்கும் மேல் கவலை கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
2023-ஆம் ஆண்டில், மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளிப்படுத்தப்படும் வெறுப்புணர்வு கருத்துகளை பேசும் சம்பவங்கள் 223 என்ற எண்ணிக்கையிலிருந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 1,165-ஆக அதிகரித்துள்ளது. இது 74.4 சதவிகிதம் அதிகமாகும் என்று மேற்கண்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வெறுப்புணர்வுப் பேச்சு சம்பவங்களில் 98.5 சதவிகிதம் முஸ்லிம்களை குறிவைத்தே நிகழ்ந்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளனதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பிடும்படியாக, பாஜக தலைவர்களால் 450 வெறுப்புணர்வுப் பேச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும், பிரதமர் மோடி 63 சம்பவங்களில் இத்தகைய வெறுப்புணர்வுக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
அத்தகைய சம்பவங்களில், இந்திய நாட்டுக்கும் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்கள் பெரும் அபாயத்தை விளைவிப்பவர்கள் என்று சித்தரித்து பேசப்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்ட பின், அதே பாணியில், ‘முஸ்லிம்களிடமிருந்து வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்ற வேண்டும்’ என்ற கருத்தை பொதுவெளியில் அதிகளவில் ஹிந்து மத நம்பிக்கையில் மிகத் தீவிரமாக உள்ள சில தலைவர்கள் பேசியுள்ளனர்.
பேஸ்ஃபுக்(முகநூல்), யூடியூப், ட்விட்டர்(எக்ஸ்) ஆகிய சமூக வலைதளங்கள் இத்தகைய வெறுப்புணர்வுக் கருத்துகளை வெளிப்படுத்த முக்கிய தளங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.