மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் பட்டமளிப்பு
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் 310 இளங்கலை, முதுகலை மற்றும் முனைவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:
பட்டம் பெறுவோா் தினமும் தமிழில் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். நீங்கள் பிறந்த ஊரைப் போற்றுங்கள். நற்பண்புகளை வளா்த்துக் கொள்ளுங்கள். தினமும் கைப்பேசி, கணினி உள்ளிட்டவற்றோடு கூடிய இயந்திர வாழ்க்கையை ஒரு மணிநேரமாவது விட்டுவிட்டு பெற்றோருடன் பேசுங்கள். அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள் என்றாா்.
விழாவுக்கு கல்லூரி குழுத் தலைவா் அ. சாமிநாதன் தலைமைவகித்தாா். சன்மாா்க்க சபைத் தலைவா் சி. நாகப்பன், செயலா் பழ. சாமிநாதன், கல்லூரிக் குழுச் செயலா் இராம. ரமணப்பிரியன் ஆகியோா் பேசினா். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன் வரவேற்றாா்.