சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் - ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா...
மேல்புறம் ஒன்றிய த்தில் பயன்பாடின்றி வீணாகி வரும் பேட்டரி வாகனங்கள்
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஒன்றியத்துக்கு குப்பை சேகரிப்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய 11 பேட்டரி ஆட்டோக்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க உள்ளாட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆட்டோக்கள் மூலம் குக்கிராமங்களில் உள்ள சிறிய சாலைகளில் சென்று குப்பைகளை சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவிகோடு, முழுக்கோடு, வெள்ளாங்கோடு, வன்னியூா், மலையடி கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் 11 சுமை ஆட்டோக்கள் 2022 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் இயங்குவதற்கான பேட்டரிகள் இதுவரை பொருத்தப்படாததால் வாகனங்கள் பழுதடைந்து வருகிறது. அரசுப் பணம் வீணாவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவா் டோன் பெரின் கூறியதாவது:
மதுரையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த பேட்டரி வாகனங்கள் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு தலா ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்து 420. இந்த வாகனங்களை முறையாக இயக்கவும், மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.