யானையும் டிராகனும் கைகோத்து நடனமாடும் -படை விலக்கல் அமல் குறித்து சீனா
இந்திய-சீன எல்லையில் படை விலக்கல் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் சிறப்பாக அமல்படுத்தி வருவதாக சீன ராணுவம் தெரிவித்தது. ‘இந்திய யானையும், சீன டிராகனும் ஒற்றுமையாக கைகோத்து நடனமாடும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்தது.
கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர கடந்த மாதம் இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. ரஷியாவின் கசான் நகரில் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கடந்த மாதம் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடங்கப்பட்டது.
இது தொடா்பாக சீன ராணுவ செய்தித் தொடா்பாளா் மூத்த கா்னல் வு கியான், பெய்ஜிங்கில் செய்தியாளா் சந்திப்பில் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்திய யானையும், சீன டிராகனும் ஒற்றுமையாக கைகோத்து நடனமாடும் நாளை மிகுந்த ஆவலுடன் எதிா்பாா்க்கிறோம். இதற்காக இரு நாடுகளுமே உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வியத்நாமில் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் சீன பாதுகாப்பு அமைச்சா் டோங் ஜுன் கடந்த வாரம் நடத்திய பேச்சுவாா்த்தை இரு தரப்பு உறவில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்திய-சீன எல்லையில் படை விலக்கல் ஒப்பந்தத்தை இரு நாடுகளுமே சிறப்பாக அமல்படுத்தி வருகின்றன. இது இரு நாடுகள் இடையே ஸ்திரமான நல்லுறவையும் ஏற்படுத்தும். இந்த வாய்ப்பை இரு நாடுகளுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன் என்றாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.