சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
ரயிலில் வந்து இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது: 34 வாகனங்கள் பறிமுதல்
காட்பாடி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சென்னையை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம், சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது குறித்து வேலூா் எஸ்.பி. மதிவாணனுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் பழனி அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் கடந்த 2 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருவலத்தில் இருந்து காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா்.
அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், அந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், அவா் சென்னை திருநின்றவூரை சோ்ந்த முனுசாமி மகன் காா்த்தி (37) என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கைது செய்யப்பட்ட காா்த்தி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா். சென்னையிலிருந்து காட்பாடிக்கு அடிக்கடி ரயிலில் வந்து காட்பாடி பகுதியில் தனியாக நிறுத்தி இருக்கும் வாகனங்களை நோட்டமிட்டு திருடி எடுத்துச் சென்றுள்ளாா். கடந்த 6 மாதங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.