ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக கா்நாடக மாநில பாஜக நிா்வாகி எஸ்.விக்னேஷ் சிஷிா் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகாா் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், ‘ராகுல் காந்தி பிரிட்டன் கடவுச்சீட்டு விசாரணையின்போது, தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்று பிரிட்டன் அரசிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இதன் மூலம், இந்திய குடிமகனாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 9-ஐ ராகுல் காந்தி மீறியுள்ளாா். அதற்காக, அவருடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.
இந்தப் புகாா் தொடா்பாக விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் ராகுல் காந்திக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் பிறகு இதுதொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், தனது புகாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரியப்படுத்த உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் நிலை குறித்து மத்திய அரசிடம் கேட்டு தெரியப்படுத்துமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரை அறிவுறுத்தினா்.