ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்டப் பாலங்கள்: முதல்வர் உத்தரவு!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில்
ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாலங்களின் கட்டுமானப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு மாநில நிதித்திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். டிச. 17-ல் அன்று இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.
2024-25 ஆம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177.85 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.