2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!
`ராகுல் காந்தி என்னைத் தள்ளிவிட்டார்’ - பாஜக எம்.பி-யின் குற்றச்சாட்டுக்கு ராகுலின் பதில்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துகள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தவே, அதற்கு எதிராக பாஜக எம்.பிக்களும் போராட்டம் நடத்தினர். இதனால் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்.பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாஜக எம்.பி பிரதாப் சந்திர சாரங்கி, நாடாளுமன்றத்தின் மகர் தாவர் கதவு அருகே நடந்த சச்சரவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதற்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த எம்.பிக்களே ஒரு குழுவாக தன்னைத் தள்ளிவிட்டு மிரட்டல் விடுத்ததாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் மிரட்டியதாக ராகுல் கூறியுள்ளார்.
"நான் உள்ளே செல்ல முயன்றேன்... ஆனால் பாஜக எம்.பி-க்கள் என்னைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் என்னைத் தள்ளிவிட்டனர், என்னை மிரட்டினர்" எனக் கூறியுள்ளார். மேலும் கார்கே மிரட்டப்பட்டாரா என கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆமாம், அதுவும் நடந்தது. நாங்கள் இந்த சச்சர்வால் மட்டும் பாதிக்கப்படவில்லை. இது நாடாளுமன்றம், நாங்கள் எம்.பிக்கள், எங்களுக்கு உள்ளே செல்ல உரிமை இருக்கிறது" என தங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார் ராகுல் காந்தி.
மேலும் ராகுல், "இந்த சண்டைகள் கேமராவில் கூட பதிவாகியிருக்கலாம்" என்றும் தெரிவித்தார்.
பாஜக எம்.பி சாரங்கி, "ராகுல் காந்தி ஒரு எம்.பி-யைத் தள்ளிவிட்டார். அந்த எம்.பி என்மீது விழுந்ததில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது நடக்கும்போது நான் படிகட்டில் நின்றுகொண்டிருந்தேன்." என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்திக்கும்போது சாரங்கி வீல் சேரில் அமர்ந்திருந்தார். மருத்துவ உதவியாளர் அவரது தலையில் ஒரு வெள்ளைத் துணையை வைத்து பிடித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சாரங்கி.