CAG : `கோயில்களின் வரவு செலவைத் தணிக்கை செய்ய முடியாதா?’ - சி.ஏ.ஜி குற்றச்சாட்டுக்கு பதிலென்ன?
மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுகளை முறையாக ஆய்வு செய்து அந்த அறிக்கையை மாநில சட்டசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது, அரசியலமைப்புச் சட்டத்தினால் 'சுதந்திரமான அமைப்பு' என அங்கீகரிக்கப்பட்ட இந்தியத் தணிக்கைத் துறையின் முதன்மையான பணி.
சில தினங்களுக்கு முன் தமிழக அரசின் வரவு செலவுகள் ஆய்வு செய்யப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அந்த அறிக்கையில்,
'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியத் தணிக்கைத் துறை தலைவர் (சி.ஏ.ஜி.) தணிக்கை மேற்கொள்ளும் அதிகாரத்தை மீறும் வகையில் தணிக்கைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைக்காததாலும் ஆவணங்களைத் தராததாலும் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்கள் மற்றும் அவற்றின் கொடைகள் மீதான ஆணையரின் பொதுக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் ஆய்விற்காக முன்மொழியப்பட்ட இணக்க தணிக்கை மேற்கொள்ள முடியவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்..
``கோயில்களுக்கு மன்னர்கள் காலத்துல இருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு இருக்கு. தவிர உண்டியல், டொனேஷன்னு பக்தர்கள்கிட்ட இருந்தும் லட்சக்கணக்குல பணம் வருது, இந்தத் தொகைகள் முறையா கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னுதான் அந்த அறநிலையத்துறை உருவாக்கப்பட்டுச்சு.
சொல்லப் போனா அறநிலையத்துறை பணியாளர்களின் ஊதியமே கோயில் பணத்துல இருந்துதான் கொடுக்கப்படுது. இந்தியத் தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை மக்கள்கிட்ட இருந்து வரி முதலான வருவாய் அரசுக்கு வர்றதை ஆய்வு செய்ய அதிகாரமிருக்கு. எந்தெந்த துறைகள்ல மக்கள் பணம் போகுதோ அந்தத் துறைகளை ஆய்வு செய்யலாம்.
கோவில்களுக்கு வர்ற பணம் மக்கள் விருப்பப்பட்டு, ஒரு நம்பிக்கையில கொடுக்கிறது. இது அரசுக்குத் தர்ற பணம் ஆகாது. அதனாலதான் இந்தியத் தணிக்கைத் துறையின் ஆய்வு வரம்புக்குள் இந்தத் துறை வராதுனு சொல்றாங்க.
அதேநேரம், அறநிலையத்துறைக்குள்ளேயே ஒரு ஆடிட் விங் இருக்கு. அது கோயில்களின் சொத்துகள், நன்கொடை, உண்டியல் பணம் எல்லாத்தையும் ஆய்வு செய்து துறைக்கு உரிய அறிக்கையை அனுப்பிட்டுதான் இருக்காங்க’’. என்றனர்.
ஓய்வு பெற்ற சில அறநிலையத்துறை அதிகாரிகளோ இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ’சி.ஏ.ஜி. அரசியலைமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனம்னு சொல்றாங்க. அதே அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு. அப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட மதத்தால் நிர்வாகிக்கப்படுற இடங்கள்ல அரசு எப்படி ஆடிட் செய்ய முடியும். பண்ணவே கூடாது’’ என்கிறார்கள் இவர்கள்.
சி.ஏ.ஜி. அறிக்கை வெளியான அன்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், `அறநிலையைத்துறை கோப்புகளைக் கொடுத்து ஒத்துழைப்பு தரவேண்டுமெனக்’ குறிப்பிட்டிருந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் இரா.ராமலிங்கத்திடம் இது தொடர்பாகப் பேசினோம்.
‘’கோயில்களுக்கு பக்தர்கள் செலுத்துகிற பணம் வரி வருவாய் இல்லதான். ஆனா அது லட்சங்கள்ள கோடிகள்ல வருது. இந்தப் பணம் செலவாகிற இடத்துல சூப்பர்வைஸ் பண்ணுகிற அமைப்பா அறநிலையத்துறைதான் இருக்கு. அவங்க இந்தப் பணத்தை முறையாகத்தான் செலவு செய்றாங்களானு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவங்களுக்குள்ளேயே நடக்கிற தணிக்கை விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிய மாட்டேங்குதே. அதோட வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகுமில்லையா? கோயில்கள் மூலமா கிடைக்கிற பணம் கோயில் வளர்ச்சிக்கு மட்டும்தான் செலவாகுதான்னு தெரியலையே. இதுக்குதான் காலம்காலமா கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டுல இருந்து விடுவிக்கணும்கிற கோரிக்கையை நாங்க வச்சிட்டு வர்றோம்’’ என்கிறார். இவர்.
பா.ஜ.க.வின் இந்தக் கோவில் நிலைப்பாடு குறித்து திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவனிடம் கேட்டோம்.
’’அறநிலையத்துறை இன்னைக்கு நேத்து உருவாக்கப்படலை. கோவில் சொத்துகள் ஒரு சில தனி நபர்களால் கொள்ளையடிக்கப்படுதுங்கிற குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிக்கட்சி காலத்துலயே உருவாக்கிட்டாங்க. காமராஜர் முதலமைச்சரா இருந்தப்ப இந்தச் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு இப்ப வரை இயங்கிட்டு இருக்கு. மாநில அரசே கோயில்களின் வரவு செலவு குறித்து முறையான தணிக்கை செய்துடுறாங்க. ஏதோ திமுக அரசாங்கம்தான் கோயில்கள் விஷயத்துல தவறு செய்கிற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்க அறிக்கை விடுறாங்கன்னா அதுக்கு என்ன பதில் சொல்றது? கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருந்து விடுவிக்கணும்கிறதெல்லாம் அரசியல் பண்றதுக்காகப் பேசறது’’ என்கிறார்.