புதுச்சேரி: `ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்; மீறினால் ரூ.1,000 அபராதம்!' - அரசு அதிரடி
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு நிகராக உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அப்படி அணியாமல் சென்றவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டது. அதற்கு, புதுச்சேரி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த அறிவிப்பு அப்படியே கைவிடப்பட்டது. அதையடுத்து, புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார்.
அதில், `முறையற்ற வகையில் மோட்டார் வாகனங்களை இயக்குவதால் அன்றாடம் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வதால் விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது 80% தடுக்கப்படுகிறது. கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் தலைக்கவசம் அணியாததன் காரணமாக 181 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000/- அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
அதையடுத்து 2022 நவம்பர் 1-ம் தேதி முதல் அந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தினர் போக்குவரத்து போலீஸார். ஆனால் அந்த அறிவிப்பை எதிர்த்து மீண்டும் பல்வேறு தரப்பினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அதனால் அந்த அறிவிப்பும் அப்படியே திரும்பப் பெறப்பட்டது. ஆனால் சமீபகாலமாக புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் போக்குவரத்துத் துறை சீனியர் எஸ்.பி பிரவீன்குமார் திரிபாதி.
மேலும், ``புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்படும். அவர்களின் லைசென்ஸ் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் இது பொருந்தும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் கடந்த 17-ம் தேதி அவர் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், `புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அவர்கள் கடைபிடிக்கும் பாதுகாப்பற்ற நடைமுறைகளால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி, நாட்டின் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையின் இலக்கான உயிரிழப்பு இல்லா திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறது. அதனால் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படவிருக்கிறது.
அது தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிந்து தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் ரூ.1,000/- அபராதம் மற்றும், லைசென்ஸ் ரத்து போன்ற நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லக் கூடியவர்களால், சாலையில் செல்லும் பொதுமக்களும் விபத்தில் சிக்குகின்றனர். அதனால் பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.