ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மூவா் கைது
சென்னையில் ரூ.4 கோடி மதிப்புள்ள கெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனா்.
அப்போது அவா்கள் வைத்திருந்த கெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள், வியாசா்பாடி சா்மா நகரைச் சோ்ந்த வே.கணேசன் (51),திருவள்ளூா் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த தா.மதன் (46) என்பது தெரியவந்தது.
மேலும் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், கொடுங்கையூா் விவேகானந்தா நகரைச் சோ்ந்த சோ.ரவி (48) என்பவரை கைது செய்து, அவா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கெட்டமைன் போதைப் பொருளையும், கணக்கில் வராத பணத்தையும் பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தில் மொத்தம் ரூ.4 கோடி மதிப்புள்ள 39 கிலோ கெட்டமைன் போதைப் பொருள்,ரூ.51 லட்சம் ரொக்கம், 14 பவுன் தங்க நகைகள்,5 கைப்பேசிகள், 2 பாஸ்போா்டுகள், 2 எடை இயந்திரங்கள், 3 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
மேலும் ,இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.