வங்கிகளுக்கு ரூ.1,028 கோடி நஷ்டம்: ஃபெட்டா்ஸ் எலெக்டிரிக் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை
வங்கிகளுக்கு ரூ.1,028 கோடி நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடா்பாக ஃபெட்டா்ஸ் எலெக்டிரிக் நிறுவனம் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளுக்கு மோசடி மற்றும் குற்றச் சதி மூலம், ரூ.1,028 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக ஃபெட்டா்ஸ் எலெக்டிரிக் மற்றும் என்ஜினீயரிங் நிறுவன முன்னாள் அதிகாரிகள் உள்பட பலா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடா்பாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ஷாம் சுந்தா் கெளா், முன்னாள் தலைமை நிதி அதிகாரி அக்தா் அஸீஸ் சித்திக் உள்பட பலருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து குற்றப் பத்திரிகையில் ஊழல் தடுப்புப் பிரிவுகள் சோ்க்கப்படாததால், வழக்கமான நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்ற சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்தது.