``வன்மம், வயிற்றெரிச்சல்... தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்'' - இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடிய ஸ்டாலின்!
தி.மு.க ஆட்சியைக் கண்டு எதிர்முகாமில் இருப்பவர்கள் வயிற்றெரிச்சலில் புலம்புவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் சாடியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
முன்னதாக, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு, ``மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க அரசு செய்து கொண்டிருக்கிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன." என்று விமர்சித்திருந்தார்.
விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின்..
அதற்கு, விருதுநகரில் எதிர்வினையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``வாய்த்துடுக்காகப் பேசி, பேசித்தான் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறீர்கள். தமிழ்நாட்டைக் காக்க 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைக்க வேண்டும்?" என்று கேள்வியெழுப்பினார்.
`ஒரே மேடையில் விவாதம்..' - எடப்பாடி
இதற்கு, ``கலைஞரின் அடையாளத்தில்தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும். கலைஞர் மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. அ.தி.மு.க-வின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?" என எடப்பாடி பழனிசாமி சவால் விட்டிருந்தார்.
`விவாதத்துக்கு தயார்' - உதயநிதி
இந்தச் சவாலுக்கு, ``திட்டங்களுக்குத் தொடர்ந்து கலைஞர் பெயர் வைக்கப்படுவது விமர்சிக்கப்படுகிறது. யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம். அரசுத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். என்னை அழைத்தால் நான் செல்வேன்." என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
`அவர்கள் பேசட்டும், நாம் சாதிப்போம்' - ஸ்டாலின்
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ஆம் தேதியன்று ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் கேட்டறிந்தேன்.
பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்திற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டேன். நவம்பர் 10 அதே விருதுநகரில் மக்கள் நலத்திட்ட விழாவுக்குச் சென்றேன். ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்குப் பட்டா வழங்கும் விழா என்பதால், பயனாளிகள் அனைவருக்கும் பட்டா கிடைத்ததை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவித்தேன். நலத்திட்ட விழா நிறைவடைந்தபோது, அத்தனை பேருக்கும் பட்டா உள்ளிட்ட பயன் தரும் உதவிகள் முறையாகப் போய்ச் சேர்ந்திருப்பதை உறுதி செய்தனர்.
இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். கலைஞர் பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார். கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை.
விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்திற்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைஞரின் 40 ஆண்டுகால நண்பரான எம்.ஜி.ஆரின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது. வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம்." என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88