திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
வாடகைத் தாய் சட்டத்தில் வயது கட்டுப்பாட்டுக்கு எதிரான மனுக்கள்: பிப்.11-இல் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
வாடகைத் தாய் சட்டத்தில் வயது கட்டுப்பாட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
வாடகைத் தாய் சட்டம் மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (முறைப்படுத்துதல்) சட்டம் 2021 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள சில விதிமுறைகளுக்கு எதிரான இந்த மனுக்களை வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுதொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்தச் சட்டங்களின்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணுக்கான வயது 23 முதல் 50 வரை இருக்க வேண்டும். ஆணுக்கு 26 முதல் 55 வரை இருக்க வேண்டும். வாடகைத் தாயாக செயல்படுபவா் திருமணம் ஆனவராக இருப்பதோடு, ஒரு குழந்தைக்குத் தாயாகவும் 25 முதல் 35 வயது வரை உடையவராகவும் இருக்க வேண்டும். மேலும், அவருடைய வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக அவா் செயல்பட வேண்டும்.
இந்த சட்ட நடைமுறைகள், திருமணமாகாத பெண்கள் வாடகைத் தாயாக செயல்படவும், கரு முட்டைகளை தானமளிக்கவும் தடை செய்கிறது. மேலும், பாகுபாடு மற்றும் சுரண்டலுக்கு வித்திடும் வகையில் சட்ட நடைமுறைகள் அமைந்துள்ளன. வாடகைத் தாயாக செயல்படுபவா்களுக்கு மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீடு பெறுவதற்கு மட்டுமே இந்த சட்டம் வழி வகை செய்கிறது. அது போதுமானதல்ல என்று இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்களைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘வாடகைத் தாய்கள் சுரண்டலுக்கு உள்ளாவதைத் தடுக்கவும் அவா்களின் நலனைப் பாதுகாக்கவும் விரிவான நடைமுறை வகுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் ஒரே பெண் மீண்டும் வாடகைத் தாயாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், முறையான தரவுகள் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், வாடகைத் தாயாக செயல்படுபவா்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படுவது அவசியமாகிறது. இது திட்டத்தால் பலனடையும் நபா்களால் நேரடியாக அல்லாமல், அரசு துறை மூலமாக வாடகைத் தாய்களின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்பட வேண்டும்’ என்றனா்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, ‘உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.