நட்சத்திர பலன்கள்: மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை #VikatanPhotoCards
விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அமைச்சர்!
விருதுநகரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு முன்பாக, சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலரும் போட்டிப்போட்டு முன்னாள் அமைச்சர்களுக்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் மரியாதை செய்ய முண்டியடித்துக் கொண்டனர். அப்போது கையில் சால்வையுடன் மேடைக்கு வந்த கட்சி நபர் ஒருவர், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு மரியாதை செய்ய முயற்சித்துள்ளார். அந்த சமயம் திடீரென கோபமடைந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, சால்வை அணிவிக்க வந்த தொண்டரை தனது கையால் அடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. இது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சமாதானப்படுத்திய கட்சி நிர்வாகிகள், தொடர்ந்து நிகழ்ச்சி சுமுக முறையில் நடைபெறுவதற்கு உதவினர்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கட்சித் தொண்டரை தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கட்சியினரிடம் கேட்கையில், ``இது சுமுகமாக முடிந்துவிட்ட பிரச்னை. இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை சாதாரண விஷயத்தை எதிரி கட்சியினர் ஊதிப் பெரிதாக்குகின்றனர்" என்றனர்.