நட்சத்திர பலன்கள்: மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை #VikatanPhotoCards
பூட்டு மாவட்டத்தில் `லாக்' ஆகிய புல்லட் ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள்... ஸ்கெட்ச் போட்டுப் பிடித்த போலீஸ்!
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாக தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வழக்குகளை தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில் கரூர் ராயனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (23), பிரசாந்த் (19) ஆகியோரைக் கைதுசெய்து, அவர்களிடம் இருந்து 9 புல்லட்கள் உட்பட 11 டூவிலர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய இன்ஸ்பெக்டர் வினோதா, ``தாடிகொம்பு ஐ.ஓ.பி., வங்கி பின்புறம் ஒரு புல்லட் திருட்டு போனதாக புகார் வந்தது. அந்த வழக்கை விசாரிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்தோம். அதில் திருடர்கள் புல்லட்டை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் குற்றவாளிகளின் முகம் தெளிவாக தெரிந்தது. அந்த முகத்தை வைத்து, ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களின் விவரம் இருக்கும் போலீஸாரின் டேட்டாவில் இருக்கிறதா என ஆய்வு செய்தோம். அதில் குற்றவாளிகள் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இருப்பினும் அவர்களை பிடிப்பது சவாலாகத்தான் இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திணறியபோது, அவர்கள் பயன்படுத்திய போன் நம்பர் சிக்னலை ட்ரேஸ் செய்யலாம் என முடிவெடுத்தோம். நல்ல வேளையாக அவர்கள் பல வழக்குகளில் சிக்கிய பிறகும் நம்பர் மாற்றாமல் பயன்படுத்தி வந்ததால் எங்களால் ட்ரேஸ் செய்ய முடிந்தது. இரண்டு முறை முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை. மூன்றாம் முறையாக எங்களுடைய சோர்ஸ் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து பிடித்தோம்.

அவர்கள் திண்டுக்கல் நகர், தாலுகா, குஜிலியம்பாறை, வேடசந்தூர், எரியோடு, கோவை சாய்பாபா காலனி, பீளமேடு, சேலம் செவ்வாய்பேட்டை, நாமக்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 9 புல்லட்களை திருடியுள்ளனர். திருடிய பைக்குகளை தனித்தனியாக பிரித்து கோவையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துவந்துள்ளனர். அதற்குள் பிடிபட்டதால் வாகனங்கள் பிரிக்கப்படாமல் தப்பியது. பிரிக்கப்பட்டு விற்பனைக்கு சென்றிருந்தால் இவர்களை கைது செய்தும் புல்லட்களை மீட்க முடியாமல் போயிருக்கும்.
ஏற்கெனவே பலமுறை கைதாகி சிறை சென்றவர்கள் என்பதால் பயமின்றி வெளியே வந்தும் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு திருட்டை செய்துவிட்டு உடனடியாக வேறு பகுதிக்கு சென்று திருடியுள்ளனர். பெரிய அளவில் திட்டமிடுவதோ பிளான் போடுவதோ இல்லை. செல்லும் இடங்களில் சிக்கும் புல்லட்களை கேஷூவலாக திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே இடத்தில் இருப்பதில்லை. திருடும் டூவீலர்களையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது இல்லை.

திருடிய டூவிலர்கள் மொத்தமாகவோ, முழுமையாகவோ விற்பது பணத்தை கைநிறைய வைத்து கொள்வது இல்லை. டூவீலரை திருடிவிட்டால் முதலில் அதிலிருக்கும் எக்ஸ்ட்ரா ஸ்பேர் பார்ட்களை கழற்றி விற்றிருக்கிறார்கள். அதன் பிறகு படிப்படியாக ஒவ்வொரு டூவீலர்களாக எடுத்து முக்கிய பாகங்களை பிரித்து விற்றுள்ளனர். அதில் கிடைக்கும் குறைந்தபட்சப் பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டியுள்ளனர்.
அதன் பிறகு புல்லட் உதிரி பாகங்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதை அறிந்து புல்லட்களை குறிபார்த்து திருடத் தொடங்கியுள்ளனர். ஹரிஹரன் 7 ஆம் வகுப்பு, பிரசாந்த் 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கின்றனர். நண்பர்களான இவர்கள் சிறுவயதில் இருந்தே சிறுசிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். திருமணம் முடித்துள்ளனர்.

இவர்கள் வீட்டை உடைத்து நகை பணத்தை திருடியதாக திண்டுக்கல் ஆயக்குடியில் 2 வழக்குகள், பழனி நகரில் ஒரு வழக்கு, திருச்சி ராம்ஜி நகரில் ஒரு வழக்கு, பரமத்தி வேலூரில் ஒரு வழக்கு உள்ளது. சில வழக்குகளில் கைதாகி சிறை சென்று வந்திருக்கின்றனர். டூவீலர்கள் திருடர்களை பிடிக்கும் போலீஸார், அந்த திருட்டு டூவீலர்களையும், அதன் உதிரிபாகங்களை வாங்கி விற்போரையும் கண்டறிந்து தூக்கினால் வாகனத் திருட்டுகளை கட்டுப்படுத்தலாம்" என்றார்.