உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!
சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தார். மேலும், இவர் கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுளுக்கு முன்பு வரை, பல ஆண்டுகள் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது, கரூரைச் சேர்ந்த நல்லமுத்து என்ற தொழிலதிபரிடம் அஸ்ஸாமில் கொசுவலை ஆர்டர் பெற்றுத் தருவதாகவும், சூரிய மின் சக்தி பேனல் நிறுவ ஆர்டர் பெற்றுத் தருவதாகவும் கூறி, மூன்று தவணைகளில் ரூ.16 கோடி வரை பெற்றுள்ளார். ஆனால், பணம் பெற்றுவிட்டு ஆர்டர்கள் பெற்றுத் தராததால், கரூர் மாவட்டக் குற்றப்பிரிவில் நல்லமுத்து புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக வருவாய் அலுவலரான சூர்யபிரகாஷைக் கைதுசெய்தனர். அதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக நேற்று மாலை கரூர் அழைத்துவரப்பட்ட சூர்யபிரகாஷிடம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின், கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு, இவ்வழக்கில் சூர்யபிரகாஷ் மாவட்ட வருவாய் அலுவலராக கரூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது, வட்டார வளர்ச்சி அலுவலராக அப்போது பணியாற்றி வந்த கார்த்திகேயன், திருப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட தரகர்கள் என மொத்தம் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் அஸ்ஸாமைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மேலும் 4 பேருக்குத் தொடர்பு உள்ளதாகவும், அவர்களையும் இந்த வழக்கில் போலீஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் முன்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய சூரியபிரகாஷ் கரூர் தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.