இக்னோ பட்டமளிப்பு விழா: சென்னை மண்டலத்தில் இருவருக்கு தங்கப் பதக்கம்
லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்
உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அடைத்து அதனை வயிற்றுக்குள் மறைத்து வைத்தும் எடுத்து வருகின்றனர். அது போன்று கொரியர் மூலம் போதைப்பொருளை வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்த மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கு இடமான ஒரு கொரியரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நவிமும்பையில் ரெய்டு நடத்தியதில், 11.54 கிலோ கொகைன், 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 200 கோடியாகும். இவ்விவகாரம் தொடர்பாக ஹவாலா வியாபாரி எச்.பட்டேல், வியாபாரி மானே உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் நன்றாகப் படித்தவர்கள் ஆவர். இதில் எச்.பட்டேலும், மானேயும் வெளிநாட்டிலிருந்து வரும் போதைப்பொருளை வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 80 முதல் 90 கிலோ கோகைன், 60 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போன்றவற்றைக் கடத்திக்கொண்டு வந்து விற்பனை செய்திருப்பதாக அவர்களிடம் விசாரித்ததில் தெரிய வந்தது.
ஒரு கிலோ கோகன் ரூ.10 கோடி முதல் 15 கோடிக்குச் சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா மூலம் 90 லட்சத்திற்கு வியாபாரம் செய்துள்ளனர். அவர்கள் இரண்டு ஆண்டில் மொத்தம் 1,128 கோடி அளவுக்குப் போதைப்பொருளைக் கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர். போதைப்பொருளை வாங்குவதற்குத் தேவையான பணத்தை ஹவாலா முறையில் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் போதைப்பொருளைச் சிறிய அளவில் கப்பல் அல்லது கொரியர் மூலம் அமெரிக்காவிலிருந்து வரவைத்துள்ளனர்.
மும்பை கும்பலை லண்டனைச் சேர்ந்த நவீன் என்பவன் இயக்கி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் லண்டனைச் சேர்ந்த நவீன் மிகவும் நன்றாகப் படித்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர். நவீன் லண்டன் திரைப்படக்கல்லூரியில் படித்தவர் ஆவார். அதோடு கிரிமினல் சைகாலஜி பிரிவிலும் பட்டம் பெற்று இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் வெளிநாட்டில் படித்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நன்றாகப் படித்தவர்கள் ஒன்று சேர்ந்து இப்போதைப்பொருளை யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து வந்துள்ளனர். நவீன் அமெரிக்காவிலிருந்து போதைப்பொருளை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பார்.

அவற்றை பட்டேலும், மானேயும் வாங்கி இந்தியாவில் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதோடு, இந்தியாவிலிருந்து வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வந்தனர். கொரியர் மூலம் சிறிய அளவில் கடத்தி வரப்பட்டதால் வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போது நவீன் லண்டனில் தலைமறைவாகிவிட்டார். அவனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் போதைப்பொருள் வர்த்தகத்தை போலீஸார் கண்டுபிடித்து இருப்பதை மத்திய அமைச்சர் அமித் ஷா வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
