ஹைட்ரஜன் டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கிய டாடா மோட்டார்ஸ்!
குழந்தை பிரசவித்த ஆதரவற்ற சிறுமி; உறவினர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது - குடியாத்தம் அதிர்ச்சி!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற 16 வயது சிறுமி அவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். மனவளர்ச்சிக் குன்றிய அவரின் தாயும் நாளடைவில் மாயமாகிவிட்டார்.
இதனால், அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டில் சிறுமி வசித்து வந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்ற சிறுமியை மேற்கொண்டு பள்ளிக்கு அனுப்ப உறவினர்களும் தயாராக இல்லை. இதனால் அவர்கள் சொல்லும் வேலையைச் செய்துகொண்டு வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சிறுமிக்கு உடல்நிலையில் மாற்றமும், பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கருவுற்று ஆறு மாதங்கள் ஆனதும் தெரியவந்தது. அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள், இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். `போக்சோ’ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான பாலியல் குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து, மாவட்ட எஸ்.பி மதிவாணனுக்கு தகவல் சென்றது. இதையடுத்து, சிறுமியிடம் அத்துமீறிய கொடூரர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி மதிவாணன்.

அதன் பிறகே குடியாத்தம் போலீஸார் விசாரணையில் இறங்கினர். குடியாத்தம் அருகிலுள்ள மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் உறவினரான சமையல் மாஸ்டர் பிரேம்குமார் (32) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சதீஷ் என்ற சக்திவேல் (29) ஆகிய இரண்டு பேரும்தான் சிறுமியிடம் அத்துமீறியவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.