சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்ளது. சடலத்தை தூக்க முயன்றபோது, அருகே கிடந்த பொருள் திடீரென வெடித்ததது. இதில் போலீஸார் கார்த்தி, மணி, வனத்துறையினர் செல்வ ஆரோக்கியராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

சிறுமலை பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்த கிடக்க அவர் அருகே பேட்டரி, வெடிமருந்து கிடந்ததால் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனைக் கருத்தில் கொண்டு போலீஸார் விசாரணையை தொடங்கினர். ஆனால் உயிரிழந்தவர் பற்றிய தகவலால் போலீஸார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப், ``இவ்வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் உயிரிழந்த நபர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜான்சாபு 60 என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் பிள்ளைகள் 3 பேரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஜான்சாபு கோட்டயத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். குடிபழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஒரு தோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்த திண்டுக்கல் சிறுமலைக்கு வந்துள்ளார். கேரளாவில் இருந்து வரும்போது பாறைகளை தகர்ப்பதற்காக வெடிமருந்து வாங்கி வந்துள்ளார். அந்த வெடிமருந்தை பயன்படுத்த முயற்சித்தபோது அவர் காயமடைந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. அவரின் சொந்த ஊரிலும் அவர் தொடர்புடைய நபர்களிடமும் விசாரித்தபோதும் அவர் மீது வேறுவிதமான தொடர்புகளோ, புகார்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது" என்றார்.