சகோதரா் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினாா் மாயாவதி: அரசியல் வாரிசி யாரும் கிடையாது
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவா் மாயாவதி நீக்கியுள்ளாா்.
ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது’ என்றும் மாயாவதி அறிவித்துள்ளாா்.
பகுஜன் சமாஜ் கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவா் மாயாவதி தலைமையில் லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாயாவதி அறிவித்தாா்.
அதே நேரத்தில் தனது சகோதரரும், ஆகாஷின் தந்தையுமான ஆனந்த் குமாா் மற்றும் ராம்ஜி கௌதம் ஆகியோரை தேசிய ஒருங்கிணைப்பாளா்களாக மாயாவதி அறிவித்தாா்.
நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் எனக்குக் கிடையாது என்று கூறிய மாயாவதி, உறவினா்களைவிட கட்சியின் நலன்தான் எனக்கு முதன்மையானது என்றும் அறிவித்தாா்.
பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனாா் அசோக் சித்தாா்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசோக் சித்தாா்த் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.