Tree Aadhar : மனிதர்களுக்கு மட்டுமல்ல... இந்தியாவின் 'இந்த' இடத்தில் மரங்களுக்கும் ஆதார் உண்டு!
உங்களுக்கும், எனக்கும் ஆதார் நம்பர் இருந்தால் ஓகே... இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மரங்களுக்கும் ஆதார் நம்பர் கொடுக்கப்பட்டு வருகிறது என்றால், நம்ப முடிகிறதா?! அது வேறு எங்கும் இல்லை... இந்தியாவின் குளு குளு ஜம்மு - காஷ்மீரில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
Platanus Orientalis என்னும் 'சினார் மரங்கள்' (Chinar) மேற்கு இமய மலைத்தொடரில் உள்ள பள்ளத்தாக்குகளில் அதிகம் காணப்படுகின்றன. இது காஷ்மீரின் மாநில மரமும் கூட. சினார் என்றால் பாரசீக மொழியில் 'என்ன ஒரு நெருப்பு' என்று பொருள். இலையுதிர் காலங்களில் இந்த மரங்களின் இலைகள் மஞ்சள் சிவப்பு (yellow gradient red) நிறத்தில் இருந்ததால், இதனை எரியும் சுடருடன் ஒப்பிட்டு 'சினார்' என்று பெயர் சூட்டியுள்ளார் முகலாய மன்னர் ஜஹாங்கீர்.

இம்மரத்தின் இலைகள் காஷ்மீரின் ஒவ்வொரு கால நிலைகளுக்கும் ஏற்ப வகையில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு, ரத்த சிவப்பு, அம்பர் போன்ற பல நிறங்களில் மாறுபடுகிறது. சினார் மரத்தின் இந்த சிறப்பம்சம் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. காஷ்மீரின் வரலாறு, இலக்கியம், மொழி என அனைத்திலும் இந்த மரத்திற்கு ஸ்பெஷல் இடம் உண்டும். காஷ்மீரின் கலை மற்றும் கைவினைப் பொருள்களிலும் இந்த மரத்தைக் காணலாம்.
இந்த மரத்தின் பலன்கள் பல. இந்த மரத்தின் இலை மற்றும் பட்டை மருந்தாகப் பயன்படுகிறது. கட்டை தளவாடப் பொருள்கள் தயாரிக்க உதவுகிறது. கிளைகள் மற்றும் வேர்கள் சாயம் செய்ய உதவுகிறது.
இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த மரத்தின் எண்ணிக்கை காஷ்மீர் கட்டமைப்பு, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் சரிய தொடங்கியிருக்கிறது. இந்த மரத்தை அழிவில் இருந்து காப்பாற்ற ஜம்மு காஷ்மீர் அரசு புதிய திட்டம் ஒன்றை 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒவ்வொரு சினார் மரத்தின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அந்த மரங்களுக்கு ஆதார் நம்பரும், கியூ.ஆர் கோடும் தரப்பட்டுள்ளது. இந்தக் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால், குறிப்பிட்ட அந்த மரத்தின் அத்தனை தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். இது சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு, இந்த மரங்களையும் காப்பாற்றலாம் என்று ஜம்மு காஷ்மீர் அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் குறித்த உங்கள் கமென்ட்டைக் கீழே தெரிவியுங்கள்!