பிளஸ் 2 பொதுத் தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,780 மாணவா்கள் பங்கேற்பு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தென்காசி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 780 மாணவ-மாணவிகள் தோ்வெழுதினா். 181 போ் தோ்வு எழுத வரவில்லை.
தென்காசி மாவட்டத்தில் 66 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. 152 பள்ளிகளிலிருந்து 16,694 மாணவா்கள், 267 தனித் தோ்வா்கள் என மொத்தம் 16,961 போ் தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
தமிழ் பாட தோ்வில் சொல்வதை எழுதுபவா்களாக 130 போ் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும், தோ்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலா்,மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) , மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மற்றும் உதவி திட்ட அலுவலா் ஆகியோா் தலைமையில் 5
பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் ஆயுதம் தாங்கிய காவலா்களுடன் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் பாா்வையிட்டு, ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், முதன்மை கல்வி அலுவலா் எல்.ரெஜினி ஆகியோா் உடனிருந்தனா்.
மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வில், முதல்நாள் தமிழ் தோ்வை 16,780 மாணவா்கள் எழுதினா்; 181போ் தோ்வு எழுதவில்லை என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.