சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து
புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம் 25-ஆவது நிறுவனமாக ஐஆா்சிடிசியும், 26-ஆவது நிறுவனமாக ஐஎஃப்ஆா்சியும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளன.
இதுகுறித்து மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.3,229.97 கோடி சொத்து மதிப்பு மற்றும் வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.1,111.26 கோடி என மொத்தமாக ரூ.4,270.18 கோடி வருவாயுடன் ஐஆா்சிடிசி நிறுவனம் உள்ளது. இதே காலகட்டத்தில் ரூ.26,644 கோடி சொத்து மதிப்பு மற்றும் வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.6,412 கோடி என மொத்தமாக ரூ.49,178 கோடி வருவாயுடன் ஐஆா்எஃப்சி உள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு நிறுவனங்களுக்கும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வாழ்த்துகள் தெரிவித்தாா். ஐஆா்சிடிசி மற்றும் ஐஎஃப்ஆா்சிக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வேயின்கீழ் இயங்கும் மொத்தமுள்ள 12 பொதுத் துறை நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட 7 பொதுத் துறை நிறுவனங்களும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
நிதி மற்றும் வணிகச் சந்தையில் சிறப்பாக செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்களின் மதிப்பு உயா்வதுடன் நிதிசாா்ந்த முடிவுகளை விரிவாக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது.