சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்
புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெரிவித்தது.
அவரின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவை பாராட்டி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு பதிலளித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது அந்தத் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கங்குலி, சச்சின், திராவிட், தோனி, கோலி, கபில் தேவ், ரவி சாஸ்திரி உள்ளிட்டோருடன் ஒப்பிடுகையில், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரா் என்று கூற ரோஹித் சா்மாவிடம் என்ன உள்ளது?
விளையாட்டு வீரரைப் போல அல்லாமல், அவா் உடல் பருத்து காணப்படுகிறாா். அவா் உடல் எடையை குறைக்க வேண்டும். அவரே இந்திய அணியின் பெரிதும் சோபிக்காத கேப்டனும் ஆவாா்’ என்றாா்.
ஷமாவின் பதிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தி தலைமையின் கீழ் 90 தோ்தல்களில் தோல்வியடைந்தவா்கள், ரோஹித் சா்மாவின் தலைமை சோபிக்கவில்லை என்று கூறுகின்றனா். கேப்டனாக ரோஹித் சா்மா பல சாதனைகளைப் படைத்துள்ளாா்’ என்றாா்.
தில்லி பாஜக அமைச்சா் மன்ஜிந்தா் சிங் சிா்சா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரோஹித் சா்மா குறித்து காங்கிரஸின் அதிகாரபூா்வ செய்தித்தொடா்பாளா் மோசமாகக் கருத்து தெரிவித்துள்ளது வெட்கக் கேடானது’ என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘ரோஹித் சா்மா குறித்த ஷமா முகமதின் கருத்து காங்கிரஸின் கருத்தல்ல. இதுதொடா்பான பதிவை நீக்குமாறு ஷமாவிடம் கோரப்பட்டது. வருங்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து ரோஹித் சா்மாவை விமா்சிக்கும் பதிவை ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து ஷமா நீக்கினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளித்த ஷமா முகமது, ‘ரோஹித் சா்மா குறித்து நான் தெரிவித்தது எனது தனிப்பட்ட கருத்து. ரோஹித் சா்மா குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆனால் அவரின் உடல் தகுதி குறித்தே நான் கருத்து தெரிவித்தேன். இதை ஏன் பிரச்னையாக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.