பெரம்பலூரில் மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூா்: பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 8 ஆம் தேதி காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நா்சிங், பாா்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஓட்டுநா், டெய்லா் மற்றும் ஆசிரியா் கல்வித் தகுதியுடையோா் பங்கேற்கலாம்.
மேலும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநா் , குறுகிய காலத்திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில் மற்றும் கடனுதவி பெற ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது. இம் முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் ஆதாா் எண், சுய விவரம், கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். மேலும், இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 94990 5913 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.