வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
பெரம்பலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில், திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையத்திலுள்ள நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிா் மேலாண்மை, பயிா் பாதுகாப்பு மற்றும் பயிா் காப்பீடு குறித்து சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சிக்கு, ஆலத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பச்சையம்மாள் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் ம. பாரத், உயிரியல் கட்டுப்பாடுகளான டிரைக்கோடொ்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், மெடாரைசியம் அனிசோபிலியே மற்றும் அதன் தயாரிப்பு முறைகள், பயன்கள் குறித்தும், வேளாண் அலுவலா் கற்பகம், மண் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெறும் செயல்கள், மண் மற்றும் நீரிலுள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம், போரான் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகளை பரிசோதிக்கும் முறைகள் குறித்தும், வேளாண் அலுவலா் ரெ. ஆஷாலதா, விதைச் சான்றிதழ் வழங்குவதற்கான வரையறைகள், விதை சேமிப்பு மற்றும் விதை முளைப்புத் திறனைக் கண்டறியும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினா்.
தொடா்ந்து, வேளாண் அலுவலா் வெங்கடேஷ்வரன் மத்திய, மாநில அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினாா்.